புதிய பாய்ச்சலை  நோக்கி தமிழிலக்கியம்


கரன் கார்க்கி





தமிழ் இலக்கியம் ஏன் இன்னும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தவில்லை என்ற கேள்விகள் பல முனைகளிலிருந்தும் எழுகிறது. நீங்கள் எப்படிபட்ட ஆசான்களை மானசீகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களோ அப்படிதானே உங்களால் சிந்திக்க முடியும் அப்படி இந்த மண்ணில் இதுவரை புதின வகைமையில் யார் வியப்பீட்டியிருக்கிறார்கள்? என்ற கேள்விகளெல்லாம் இருக்கிறதுதானே.. அதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது. அந்த புரிதலில்லாமல் எப்படி பாய்ச்சலை நிகழ்த்த முடியும் ஒரு மேய்ச்சலை கூட நிகழ்த்த முடியாது.. என்று கொந்தளித்தாலும் சில அப்பட்டமான படைப்புகள் இருக்கவே செய்கின்றன.... அதை அறிஞர்கள் பட்டியலிடக்கூடாது வாசகர்களே பட்டியலிட வேண்டும் நான் அறிஞர்கள் இட்ட முழு பட்டியலில் ஒரு சில  நல்ல புதினத்தை அரிதாகவே பார்த்திருக்கிறேன்... வாசகர்களின் பட்டியலிலோ தேர்வுகள் எவ்வளவோ பரவாயில்லை. முதலில இங்குள்ள இலக்கிய குழுக்கள், கும்பல்கள் கலைக்கபடவேண்டும். அவர்கள் தங்கள் வெற்று ஆராதனைகளை நிறுத்த வேண்டும் காரணம் இலக்கிய உலகில் மற்ற இந்திய மொழிகள் மட்டுமல்ல உலக இலக்கியங்களும் வெகுவாக வளர்ந்துவிட்டன. நாம் இன்னும் சில அரை வேக்காடு படைப்புகளை விதந்தேந்தி பஜனை பாடிக்கொண்டிருக்கிறோம். அதை முதலில் நிறுத்த வேண்டும்...

தமிழ் புதின உலகில் இது ஆறுதல் காலம் இளைஞர்கள் மிக துணிச்சலாக படைப்பின் பக்கம் கவனம்கொள்கிறார்கள் சிறப்பாக படைக்க முயற்சிக்கிறார்கள். நிறைய உதாரணங்கள் நம்கண் முன்னே இருக்கிறது. என்பது ஆறுதல் வழக்கமான நிலவுடைமை சமூகத்தின் காமாந்திர பெரு மூச்சுகள் மட்டுபட்டிருக்கிறது.  

 

போல செய்தல் பண்பு இலக்கியத்துக்கு ஆகாது மரபு மரபு என்று இல்லாத ஒன்றை அல்லது பயனற்ற ஒன்றை இளைய சமூகத்துக்கும் அல்லது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் புத்துணர்ச்சியோ புத்தொளியோ அளிக்காத மரபுகளை, மீண்டும் மீண்டும் பழைய குழிகளுக்குள் தள்ளும் மரபுகளையே புலம்பலாகக்கொண்டு படைக்கப்படும் படைப்புகள் இலக்கியமும் ஆகா...

 

தமிழில் தகுதியான சிறுகதைகள் உண்டு.. தமிழில் தகுதியான கவிதைகளும் உண்டு ஆனால் நாவல்கள் என்று பார்த்தால்... மிக மிகக் குறைவு தான்

 

பத்தாண்டுகளுக்கு முன்பான புதினா வகைகளை நீங்கள் எடுத்து ஆராய்ந்தால் தெரியும் அத்தனையும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறவை... பூமணியின் பிறகு, எஸ்.ரா வின் நெடுங்குருதி, கே.டானியேலின் படைப்புகள் வ.ரா அவர்களின் சுந்தரி சின்ன சாம்பு முன் இரண்டு இலக்கிய வகைமைகளில் சேர்க்க முடியாது என்றாலும் தமிழில் என்னை கவர்ந்த படைப்புகள் இது மட்டும்தானென்றில்லை இன்னும் இருக்கலாம்... பல பலவீனமான படைப்புகளும் பட்டியலில் திணிக்கப்பட்டிருக்கும் இது போன்ற நிலைமைகளால்தான் தமிழ் புதின உலகம் பாய்ச்சலை சந்திக்கவில்லை என்பது என் கருத்து. அதே நேரம் சிறுகதைகளில் நம்மிடையே மாஸ்டர்கள் உண்டு கவிதைகளிலும்.

 

இப்போது எழுத வருகிற இளைஞர்கள் புதிய புதிய கலங்களை தங்கள் சொந்த வாழ்வை தங்கள் சமூகத்தை மிக அப்பட்டமாக எழுத முனைகிறார்கள்...

 

நீல் ஆம்ஸ்ட்ராங்க்கு முன்பே நாங்கள் நிலாவில் இறங்கி விட்டோம் இப்போதைய நவீன விமானங்களுக்கு முன்பே புஷ்பக விமானங்களை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் இன்றைய நவீன அறிவியலுக்கு முன்பே நாங்கள் கிரகங்களை கண்டடைந்து விட்டோம் என்று கூப்பாடு போடுகிற பழைய மரபுகளுக்கு பூ சூடுகிற இலக்கியங்கள் நிகழ்கால வாழ்வுக்கோ எதிர்கால கனவுகளுக்கோ  நவீன யதார்த்த இலக்கியங்களுக்கோ ஒருபோதும் வழி காட்டாது...

நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் உங்களை எழுத வேண்டும் உங்கள் காலத்தின் கடந்த காலத்தின் எதார்த்தங்களை எழுத வேண்டும் எதார்த்தங்களை புனைவுகளாக்க வேண்டும் புனைவுக்கும் வரலாறுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வரலாற்றின் மீதான புனைவுகளை உருவாக்க வேண்டும்.

நிகழ்காலத்தில் அதற்கான இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடக்க தொடங்கி இருக்கிறது எதிர்காலத்தில் சாத்தியமான வேகத்தில் தமிழ் இலக்கியம் தனது பாய்ச்சலை நிகழ்த்தும் என்று நம்புவதற்கான எல்லா அறிகுறிகளும் இப்போது தென்படுகிறது.

 

பழைய மரபுகளை நாம் அறிந்து வைத்திருக்கலாம் தெரிந்து வைத்திருக்கலாம் ஆனால் அந்த மரபுகளை பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு அவசியமும் நிகழ்கால எதிர்கால இலக்கிய நுட்பங்களுக்கு தேவையில்லை. பழைய மரபுகள் கடவுளர்களையும், அரசர்களையும், நில உடமையாளர்களையும், ஆண்டைகளையும் விதந்தேந்தி கொண்டாடிக் கொண்டிருந்தது அது தமிழையும் தமிழ் இலக்கியத்தின் செழுமையையும் நாசம் செய்து வைத்து  உழைக்கும் மக்களையும் அவர்களது வாழ்வியல் அழகியலையும் அவர்களது இயல்பான மொழியையும் பேசத் தவறிய இடைக்கால பாசாங்கு இனியும் நவீன தமிழ் இலக்கியத்துக்கு தேவையில்லை.

இளைஞர்கள் தங்களை சுற்றி நிகழும் மாற்றங்களை அந்த மாற்றங்கள் தங்களது வாழ்வையும் எப்படி சுற்றி வளைத்து நசுக்கி நகர்த்துகிறது அல்லது அந்த சுழலில் எப்படி சிக்கி திணற வைக்கிறது.. தங்கள் நசநசப்பான வாழ்க்கைக்கு காரணமான மூலக்கூறுகளை கண்டடைந்து அதன் சுவாரசியங்களை, அழகியலை அதன் கண்ணீரை, சிரிப்பை எழுத்தாக வர வேண்டும் இப்போது நிறைய இளைஞர்கள் எழுத வருகிறார்கள் அதில் உண்மையில் எதார்த்தங்களே மிகையாக அழகியலாக பெருமூச்சாக இருப்பதை பார்க்க முடிகிறது.

 

நடந்த சம்பவத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதினமாக்கி பதிப்பதற்கு அனுப்பும் அளவுக்கு படைப்பு பண்பு இளைஞர்கள் கையில் இடம் பெயர்ந்து இருக்கிறது.  புதியவர்கள் மிக அற்புதமாக எழுதுகிறார்கள். ஒன்றே ஒன்றுதான் மரபுகள் நம்மை உதாசீனப்படுத்தினால் மரபுகளை பிடித்து தொங்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது... உலகமயமாக்கல், நகரமயமாக்கல், இதற்கு மத்தியில் சாதிய வெம்மை,  நகரத்தின் நெரிசல் அதன் போக்கு கிராமங்களில் இதனால் எழும் புதிய மாற்றங்கள், புதிய சமூக நெருக்கடிகள், சாதிய மதவெறி கூச்சல்களின் ஆர்ப்பாட்டங்கள் இதன் வழியாக ஏற்படும் அமைதியின்மை, வளர்ச்சி, சமூக முரண்கள் இன்னும் எவ்வளவோ இளைய சமூகத்தால் எழுதப்பட வேண்டி இருக்கிறது .... இன்றைய நாளில் கடந்த கால வரலாற்றின் பாடுகளை நினைவுப்படுத்தி நிகழ்கால வாழ்வின் அலையாட்டத்தை எதிர்காலத்தில் அமைதியை உணர்ந்து படைப்புகள் வரும் என்றால் தமிழ் இலக்கியம் மிகப்பெரிய பாய்ச்சலை நோக்கி நகரும் எல்லா வாய்ப்புகளும் இருப்பதை நம்மால் நம்பிக்கையோடு பார்க்க முடிகிறது.

கரன் கார்க்கி

Comments