நான் வேடனின் ரசிகன்
வேடன் என்கிற மேடை பாடகன் இந்த பூமிப் பந்தையே வசிகரிக்கும் அசாத்திய வீச்சுள்ள கருத்துக்களை மக்கள் மீது இசையாக பாய்ச்சுகிறான்.
அந்த குரல் நேரடியாக விடுதலையை முழங்குகிறது. தன் மீது சுமத்தப்பட்ட அநீதியான சமூக கொடுமைகளை தனது வார்த்தை கோடாரியால் இனிமையாக பிளக்கிறது.... உண்மையை விரும்பும், விடுதலை உணர்ச்சி மிக்க இளைஞர்களை ஊக்கமடைய வைக்கிறது கறுப்பின உலகில் இது மாதிரியான குரல்கள் உலகையே ஆட வைத்து சிந்திக்க வைத்தது அந்த குரல்களின் வரிசையில் வேடனின் குரல்...
நான் வேடனின் ரசிகன்.
காலத்தின் கொடை போல வந்திருக்கிற ஒரு குரல், காலத்தின் போக்கையே மடை மாற்றுகிற ஒரு குரல், எந்த நிலத்துக்கும் சொந்தமற்ற இந்த ஒட்டுமொத்த நிலத்துக்குமான குரல், வருங்காலத்தில் இந்தியாவெங்கும் அவனது குரல் ஒலிக்கும்... ஆவேசமும், இசையும் இருந்தால் மட்டும் போதாது அதில் உண்மையும், விடுதலை உணர்ச்சியும் கொந்தளிக்க வைக்கும் அப்படி ஒரு குரல். லத்தின் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவை உலுக்கி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணி சமூகங்களுக்கிடையிலான நிற வெறி, வர்க்க வேறுபாடுகளை, தேவையான இணக்கங்களை ஒரு கலைப் பண்போடு உருவாக்கிய குரல்கள் போல சுதந்திர தாகத்தோடு தெறிக்கும் ஒரு குரல் நம் வேடனுடையதும் அப்படியான ஒரு குரலே... இப்படியான விடுதலை குரல்களை இந்த மண்ணில் இதற்கு முன்னும் நாம் கேட்டதுண்டு ஆனால் அது தொடர்ச்சியற்று இடைவெளி விட்டு முழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் வேடனின் குரல் தானியங்கி துப்பாக்கியை போல ஒரே வீச்சாக பொழிந்து தள்ளுகிறது. அது மலையாள நிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மண் தாண்டி பாலஸ்தீன ஆப்பிரிக்க நிலங்களை கூட விட்டு வைக்கவில்லை அது இன்னும் விரிந்து பறந்து விசாலமடையும்,,, ஏனெனில் அந்த குரலில் ஒரு விடுதலை அரசியல் இருக்கிறது, அந்த குரலில் ஒரு உண்மையின் ஆவேசம் இருக்கிறது, அந்த குரலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வலிகளின் முனங்கள் மீதான கோபத்தணல் தெறிக்கிறது...
அது நீண்ட நெடிய வரலாற்றுடன் உரையாடுகிறது. இடை இடையே மக்களே நான் பேசுவது நான் பாடுவது நான் சொல்வது உங்களுக்கு கேட்கிறதா என்று கேள்வி எழுப்புவதுடன்.. அது ஒன்றுக்கும் பயன்படாத மரபுகள் மீதும் உரக்க கேள்விகளை எழுப்புகிறது அந்த மரபுகள் எனக்கு ஒரு மயிருமல்லவென்று உரக்க பாடுகிறது...
வேடன் ஒரு இசை வரவல்ல அவன் ஒரு அரசியல் வரவு ஆயிரம் கூட்டங்கள் சாதிக்காததை பத்து புத்தகங்கள் சாதிக்காததை அவனது ஒரு பாடல் தெளிவை உண்டாக்கி விடுகிறது. வேடன் நசுங்கிய நசநசப்பான மண்ணுக்கு காலம் தந்த கொடை. மரபு பூச்சாண்டிகள், சுரண்டல் கேடுகள் சாதிய பூச்சிகள் மதவெறி கூச்சல்கள் வேடனை கண்டு அஞ்சி நடுங்குகின்றன, மரபுகள் தொலைந்து விடுமோ என்று பயம் கொள்கின்றன. இன்னும் விழிக்காத மக்கள் விழித்துக் கொள்வார்களோ என்று பதட்டம் அடைகின்றன அவன் குரலில் ஒரு பெரிய மயக்கம் இல்லை ஆனால் அவன் குரலில் ஒரு உண்மை இருக்கிறது அது நேரடியாகவே கேட்பவர்களின் மனசாட்சிக்கு சென்று விடுகிறது... தன் உண்மையால் அது இளைஞர்களை அள்ளி அணைத்துக்கொள்கிறது.
நான் ஒரு ராப் பாடகன் இல்லை என்று வேடன் ராப்பாடுகிறான். .. ராப்பிலே மிக அசாத்தியமான அரசியலை பேசுகிறான் சின்னஞ்சிறுவர்களை வாரி அணைக்கிறான், வெட்கமற்ற சமூகத்தை பார்த்து கேள்வி கேட்கிறான், அவன் குரல் என்னை வசீகரிக்கிறது, அவனது பாடல் என்னை தாலாட்ட வில்லை ஆனால் உசுப்புகிறது, அவனது பாடல் என்னை தூங்க வைக்கவில்லை என்னை விழிப்படைய செய்கிறது, பாடலைக் கேட்ட பிறகு என் கலக மனம் மேலும் கலகமடைகிறது....
உண்மையில் வேடன் காலத்தின் கொடை🍁
வோடனின் குரலை நீங்கள் ஒரு முறை கேட்டு பாருங்கள் குளிர்ந்திருக்கும் நீங்கள் வெப்பமடைந்து விடுவீர்கள், வேடனின் பாடலை இன்னொரு முறை கேட்டு பாருங்கள், இந்த சமூகத்தின் இறுகிக் கிடக்கும் கேடான கற்பித்தங்கள் என்னவென்று உங்களுக்கு புரிய தொடங்கும்...
ஒருவேளை உங்கள் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் உணரத் தொடங்கியிருந்தால் வேடனின் குரலில் உங்கள் சங்கிலிகள் தெறிக்கும் ஒருவேளை நீங்களே கூட அதை அறுத்துக் கொள்ளக்கூடிய முயல்வீர்கள்...
தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு துவக்கம் சில ஆண்டுகளுக்கு முன் இருந்தது ஏனோ அது மடைமாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் ஆங்காங்கே சில குரல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன ஆனால் கேரளத்தில் வேடனின் குரல் இவ்வளவு வீச்சாக அதிர்ந்து ஒலிக்க காரணம்... அந்த மண்ணின் அரசியல், அங்குள்ள இளைஞர்களின் தத்துவம் காரணமாக இருக்கக்கூடும்.... ஆனால் வேடனின் தீராத விடுதலை தாகம், ஆழமான அரசியல் புரிதல், சுரண்டல்களின் மீதான நையாண்டி பாவனை, அப்பட்டமான உண்மையின் வரிகளில் வெப்பமான அவனது குரல்.. நான் ஆதி மரத்தின் வேரு என்று முழங்கும் வேடன் காலத்தின் கொடை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்...
நான் வேடனின் ரசிகன்
வேடன் என் தம்பி...

Comments
Post a Comment