போர் வேண்டாம்
போர் குறித்த துயரம், போர் குறித்த கற்பிதம், போர் குறித்த கற்பனை, ஏதுமற்ற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறதோ என்கிற அச்சம் எனக்கு உண்டு, காரணம் வடமேற்கு, வடகிழக்கு பகுதிகளை தவிர்த்து போர் குறித்த துயரங்கள் பாதிப்புகள் காட்சிகளை கண்டுணராத பெரும்பாலான இந்தியர்கள் இந்நிலபரப்பு முழுக்க இருக்கிறார்கள் இரண்டாம் உலகப்போர் முதல் உலகப்போர்கள் கூட இந்தியாவில் நடைபெறவில்லை!
முதல் உலகப்போரில் கடல் வழியாக ஜெர்மன் கப்பலான எம்டன் சென்னையை தாக்கி சில பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது துறைமுகத்தில் இருந்த இரண்டு எண்ணைக் கிடங்குகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் வேலி சுவர் இன்னும் ஓரிரு குண்டுகள் வெடிக்காமல் போனது என்பது வரலாறு அந்த தாக்குதலுக்கே நகரிலிருந்த பணக்கார வர்க்கத்தினர் போர் பயம் காரணமாக உதகை, ஊட்டி மலைகளுக்கு சென்று விட்ட வரலாற்று செய்திகள் நம்மிடம் உண்டு! இரண்டாம் உலகப் போரில் இந்தியாவில் பெருமளவு தாக்குதல்கள் எதுவும் நடந்ததாக நமக்கு தெரியவில்லை அந்தமான் நிக்கோபார் தீவு ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு ஜப்பானிய ஜீரோ விமானங்கள் வங்காள விரிகுடாவில் பறந்த சான்றுகள் உண்டு என்றாலும் நமக்கு பாதிப்புகள் இல்லை
நமது குடும்பத்தினர் நமது உறவினர் நண்பர்கள் ராணுவத்தில் இருக்கிறார்கள் என்கிற செய்திகளை மீறி போரின் துயரம் குறித்த ஒரு பெரிய கவன ஈர்ப்பு எதுவும் இல்லாத ஒரு சமூகம் என்பது தான் எனது தீர்மானமான கருத்து.. உலக நாடுகளுக்கு மத்தியில் போர்கள் நடக்கும்போது நாம் அதை வெறுமனே அரசியல் விருப்பு வெறுப்புகளுடன் உணர்ச்சிவயப்பட்டு ஒரு நாட்டிற்கான ஆதரவு நிலைகளை எடுக்கிறோம் இப்போது உக்ரைன் ரஷ்ய போர், இஸ்ரேல் பாலஸ்தீன போர், ஆப்கான் தாலிப்பான்களுக்கு எதிராக, ஈராக்குக்கு எதிராக அமெரிக்க நடத்திய போர் என்றெல்லாம் நமக்கு செய்திகளாகவே இருக்கிறதே தவிர அதன் பாதிப்புகள் குறித்து நாம் பெரிய அளவில் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.. நம் அரசு ஆதரிக்கிற நாட்டின் பக்கம் சார்ந்த செய்திகளைதான் நம் ஊடகங்கள் நமக்கு சொல்லும் அதன் வழிதான் நாம் சிந்திப்போம் ஆனால் உண்மையென்ன பாதிப்புகள் என்ன? எங்கோ நடக்கும் சண்டையில் நம் மீது திணிக்கப்படும் பாதிப்புகள் என்ன? இதை பற்றியெல்லாம் நமக்கொன்றும் தெரியாது என்பதுதான் யதார்த்தம்.
மிக சமீபத்தில் நாமும் ஒரு போருக்கான முன்னெடுப்பை கணெடவர்கள்தான் இந்திய அரசு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிரங்கிய போது.. போர் வேண்டும் போர் வேண்டும் என்று கொந்தளித்த ஏராளமான இளைஞர்களை கொண்ட இந்திய சமூகம் ஆர்பரித்ததை நாம் மிக கவலையோடு பார்க்கிறோம் ரத்தமும் சதையுமான நம் ராணுவத்தினர் சதுரங்க காய்களை நகர்த்துவது போல் பாதுகாப்பான இடத்தில் மேசையில் உட்கார்ந்து கொண்டு போரை நகர்த்துவதில்லை களத்தில் அவர்கள் வானிலும், தரையிலும், பதுங்கு குழிகளிலும், தங்கள் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள் என்கிற ஆபத்தான ஒரு சூழ்நிலையை நாம் சிந்திக்க வேண்டாமா? இரு பக்கத்திலும் நடக்கும் சண்டையில் சண்டைக்கு இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் எளிய மக்களின் வாழ்க்கை முற்றிலும் நாசமாக்கப்படக்கூடிய சூழல் அவர்கள் முற்றிலுமாக அளித்தொழிக்கப்படக்கூடிய சூழல், விளை நிலங்கள் நாசமாவதென இவ்வளவும் இருக்கிறது இப்போது இருக்கிற நவீன ஆயுதங்களை பற்றி நம் எத்தனை பேருக்கு புரிதல் இருக்கிறது என்பது கூட நமக்கு தெரியாது வீடியோ விளையாட்டுகளை போல் அல்ல ராணுவ நடவடிக்கை மிக சமீபத்தில் இஸ்ரேலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 14,000 குழந்தைகள் உணவு இல்லாமல் சில நாட்களில் மாண்டு விடக்கூடிய துயரமான செய்தியை நாம் பார்த்தோம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த விதமான சந்தர்ப்பங்களும் சூழலும் இல்லாத நிலையில் உறுதியான மனவளம், பணவளம், படைபலம் கொண்ட ஒரு நாடு வானில் இருந்து அவர்களுக்கு உணவுகளை இறைத்தது போன்ற சகச செய்திகளையும் நாம் பார்க்கிறோம்.. ஆனால் அது பரவலாக ஊடகங்களால் வெளியிடபடவில்லை இது போலதான் ஊடகங்கள் தங்களுக்கு ஆதாயமானதை மட்டுமே பேசும் மக்களுக்கானதை அது பேசுமா? போரின் துயரத்துக்கு ஒரு உதாரணம் மட்டுமே இது. ஆனால் இதெல்லாம் தொடர்ந்து நடக்கக் கூடியதா பட்டினியால் சாகிற குழந்தைகளை விட குண்டு சிதறல்களில் சிக்கி நாசமான குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை?
பாதுகாப்பான இடத்திலிருந்து போர் வேண்டும் என்று கூச்சல் போடுகிறவர்கள் போருக்கு மத்தியில் இருக்கும் மக்களையும் போரில் ஈடுபட்டு இருக்கக்கூடிய ராணுவத்தினரையும் அவர்கள் குடும்பங்களையும் அதனால் ஏற்படக்கூடிய பொருட்செலவுகளையும் அந்த செலவுகள் தான் மீண்டும் நாட்டில் சமாதான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் தலையில் விழப்போகிறது என்கிற அச்சத்தையும் உணராதவர்கள் குறித்து நாம கவலை கொள்கிறோம். இதை எல்லாம் விட நாம் பேச நினைப்பது போரினால் நாம் சாதிக்க போவது என்ன? இதுவரை இந்த வல்லரசு நாடுகள் ராணுவங்களை வைத்துக் கொண்டு சாதித்தது என்ன என்பதற்கு உதாரணம் இரண்டாம் உலகப்போர் மிகப்பெரிய பாடம் மனித குல வரலாற்றில் நடந்த மிகத் துயரமான சம்பவம் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு வீசியதைப் பற்றி மட்டுமே நமக்கு தெரியும் ஆனால் ஏறக்குறைய 7 கோடிக்கும் குறைவில்லாமல் மக்கள் அந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். பல கோடி மக்கள் கைம்பெண்களானார்கள், லட்சக்கணக்கானோர் அனாதைகள் ஆக்கப்பட்டார்கள் வாழ்வாதாரங்கள் இழந்து நாடோடிகள் ஆகி விட்டவர்கள் ஏராளம் என்கிற கொடூர துயரங்களை எல்லாம் வரலாற்று நமக்கு கற்றுத் தந்திருக்கிறது அந்த படங்களை எல்லாம் உணராமல்
போரால் சாதிக்கப் போவது ஒன்றுமே இல்லை என்பதை கடந்த காலங்கள் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறது
தேசபக்தி என்பது என்பதன் பெயரில் அண்டை நாட்டுடன் போர் செய் என்று ஊக்கப்படுத்துவது மிக அறிவற்ற ஒரு போக்கு காட்டுமிராண்டி தனங்களில் ஒன்று மனித நாகரீகத்தின் பண்பற்ற செயல் என்று உணர்வதற்கு கூட வக்கற்ற சமூகம் தான் போர் குறித்து ஆதரவு மன நிலையில் இருக்கும் பேச்சுவார்த்தை மூலம் வெற்றிபெறும் ராஜதந்திரம் போரில் ஈடுபட்டிருக்கும் போது சாத்தியமாவதில்லை பேச்சுவார்த்தை கூட மிகச் சிறந்த ராஜதந்திரங்களில் ஒன்றுதான் ராஜதந்திரம் என்பது எதிரியை போட்டு அடித்து வெற்றி பெறுவது அல்ல.. இணக்கமான சூழலில் நாம் விரும்பாததை தடை செய்யவும் விரும்பக் கூடியதை பெறவுமான சுமுகமான சூழலை உருவாக்குவது தான் ராஜதந்திரம் ஆனால் இங்கு சினிமா கதாநாயகர்களை போல மூன்றாம் தர அரசியல்வாதிகளை போரை விரும்புகிற ஆட்களுக்கு போர் குறித்து எது ஒன்றுமே தெரியவில்லை என்பதுதான்.. ஆதரவாளர்களுடன் போர் முனைக்குப்போவேன் என்று கூச்சலிடுகிற நகைசுவையான அரசியல்வாதிகள் மத்தியில் நம் இளைஞர்கள் போர் குறித்த வரலாறுகளை அறிந்துக்கொள்ள போர் குறித்த இலக்கியங்களை, செய்திகளை, வரலாறுகளை அவர்கள் வாசிக்க வேண்டும் போரின் துயரங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் நம் சின்னஞ்சிறு அண்டை நாடான இலங்கையில் நடந்த சீரழிவில் இரண்டு லட்சம் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பல லட்சம் மக்கள் அகதிகளாக பூமியெங்கும் சிதறிக்கிடக்கிறார்கள் அந்த துயம் நமக்கும் பாடம்தானே? மேற்கு வங்கத்துடன் போரிட்டு இருக்கிறோம் அது ஒரு தேவையின் பொருட்டு நடந்தது... பாகிஸ்தானுடன் இரண்டு மூன்று போர்கள் நடந்திருக்கிறது ஆனால் என்ன தீர்வு?
தென் கிழக்கு ஆசியாவில் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொலை செய்தார்கள் அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிழைப்புக்காக சென்று குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் தெலுங்கர்கள் சீனர்கள், மலேசியர்கள் என்கிற துயர மிக பயங்கரமானவை... அந்த வரலாறுகள் இலக்கியங்களாக வந்துள்ளது
பா. சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி கடலுக்கப்பால் என்ற நாவல்கள் மற்றும் சண்முகம் எழுதிய சயாம் மரண ரயில் அ. ரெங்சாமியின் நினைவுச் சின்னம் கரன் கார்க்கியின் மரப்பாலம் நாவல்கள் வந்துள்ளன.
1996 இல் ஜப்பானியர்கள் மலேசிய சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்தார்கள், ஜப்பானில் உலகப்போரில் நாசமாக்கப்பட்ட நகரின் வடுக்கள் இன்னமும் இருக்கிறது அதன் ரசாயனம் கதிர்வீச்சு இன்னமும் அவர்களை பாதித்திருக்கிறது அந்த அனுபவத்தில்தான் ஜப்பானியர்கள் போர் என்றாலே விலகி நிற்கிறார்கள் போரை அவர்கள் ஊக்கப்படுத்துவதில்லை காரணம் அவர்களது அனுபவம் ஐரோப்பியர்கள் கூட போர் என்றால் அவ்வளவு எளிதாக வரவேற்க்கமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் இருவரையாவது இழந்து நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அதனால் அவர்களும் போர் குறித்த அனுபவம் உள்ளவர்கள்தான் மத்திய கிழக்கில் மக்கள் எச்சரிக்கையோடு இருக்கிறார்கள் ஆனால் ஆளு வர்க்கங்கள் வியாபார நலன்களுக்காக அரசியலுக்காக போர்களை மூட்டி விடுகிறது அதன் துயரம் மக்களை தான் பாதிக்கிறது என்கிற துயரை நாம் ஒவ்வொரு நாளும் இப்போதும் பார்க்கிறோம் போர் என்பது எளிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காதது அது அவர்களை மேலும் சீரழித்து விடும் வசதியானவர்களில் போர் நடக்கும் தளங்களில் இருந்து புலம்பெயர்ந்து விடுவார்கள் அங்கு சிக்கிக் கொள்வது பலவீனமான முதியவர்கள் பெண்கள் எளிய மக்கள் குழந்தைகள் இவ்வளவு சீரழிவுக்கு பின்னும் போர்கள் சாதித்தது என்ன? என்று கேட்டால் ஒன்றும் இல்லை ஆயுத வியாபாரிகளுக்கு எப்போதும் போர் தேவைப்படுகிறது அரசியல்வாதிகளுக்கு தங்கள் வீரப்பராக்கிரமத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு போர் பூச்சாண்டிகள் தேவைப்படுகிறது. ஆனால் இதில் விழிப்புணர்வு அடைய வேண்டியது சாதாரண மக்கள், பொதுவான மக்கள் ஒட்டுமொத்த தேச மக்கள், தேசபக்தியின் பொருட்டு போரை ஊக்குவிப்பது கேடுகெட்ட முட்டாள் தனம் என்பது நம் கருத்து
போர் மனித குலத்துக்கு எதிரானது, மனித நாரீகத்துக்கு எதிரானது, எளிய மக்களுக்கு எதிரானது, போர்களை புரிந்துக்கொள்வோம் அதன் வழி சமாதானத்தை விரும்புவோம்.
- கரன் கார்க்கி



Comments
Post a Comment